ஞாயிறு, 17 நவம்பர், 2013

பிரம்மஸ்ரீ க. சண்முகநாத குருக்கள் (Brahma Sri K. Shanmuganatha Kurukkal)

பிரம்மஸ்ரீ க. சண்முகநாத குருக்கள் இலங்கை யாழ்ப்பாணம் கோப்பாய் வீரபத்திர சுவாமி ஆலய இஸ்தானீக குரு பரம்பரையில் பிறந்தவரும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் ஐம்பது வருடங்களுக்கு மேலாக ஒரு பிரதான சிவாச்சாரியராக விளங்கியவருமாவார்.
 

வரலாறு

தென்னிந்தியா சிவகங்கை பிரம்மஸ்ரீ க. ஐயாசாமி ஐயர் 1830ஆம் ஆண்டளவில் இலங்கை யாழ்ப்பாணம் கோப்பாய் தெற்கில் அமைந்திருந்த வீரபத்திர சுவாமி ஆலயத்தின் ஸ்தானீக குருவாக இருந்த சிவசுவாமி ஐயரின் ஏகபுத்திரியாகிய குப்பம்மாளைத் திருமணம் செய்தார். அவரின் மகன் முத்துக்குமாரசாமி ஐயர்.

முத்துக்குமாரசாமி ஐயரின் மனைவி உடுவில் அம்மன் கோயில் ஸ்தானீக குரு நாராயண குருக்களின் ஒரே மகளான மீனாட்சி ஆவார்.

முத்துக்குமாரசாமி ஐயருக்கு இராஜராஜேஸ்வரி, புவனேஸ்வரி என இரு புதல்விகளும் கந்ததாச ஐயர் (1890 - 1954) என்ற மகனும் பிள்ளைகளாக பிறந்தனர்.

கந்ததாச ஐயர் தனது அத்தை பெண் நாகம்மாவை திருமணம் செய்து ஒரு பெண் மகவை பெற்றெடுத்தனர். பிறந்த சில மணி நேரத்தில் அக்குழந்தை இறந்துவிட்டது. அதன் பின் சுமார் பத்து ஆண்டுகள் வரை குழந்தை பாக்கியமின்றி இருந்த தம்பதியர் பிள்ளை வரம் வேண்டி கதிர்காம யாத்திரை சென்றனர். அவர்கள் வேண்டுதல் பலித்து ஓர் ஆண்மகவு பிறந்தது. கந்தன் கருணையால் 1925ஆம் ஆண்டு ஜனவரி 25 வியாழக்கிழமை (இரத்தாட்சி வருடம் தை மாதம் 10ஆம் நாள் மூலம் நட்சத்திரம்) பிறந்த குழந்தைக்கு சண்முகநாத சர்மா என பெயரிட்டனர்.

கல்வி

பதினேழு வயதில்
பால பண்டிதர் பட்டம் பெற்றபோது..
கோப்பாய் சைவத் தமிழ் கலவன் பாடசாலையில் (நாவலர் பாடசாலை) தமிழ் மொழி மூலம் கல்வி கற்று சிரேட்ட பாடசாலை தராதர பத்திர பரீட்சையில் முதல் வகுப்பில் தேறினார். அதே சமயம் கோப்பாய் வடக்கில் தென்னிந்தியாவிலிருந்து வந்த ஸ்ரீநிவாச சாஸ்திரிகள் நடாத்திய சமஸ்கிருத பாடசாலையில் சமஸ்கிருதம் கற்று, முகாந்திரம் சதாசிவ ஐயரால் தோற்றுவிக்கப்பட்ட ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்கத்தின் பால பண்டிதர் பட்டம் பெற்றார். இதன் மூலம் ஆசிரிய பணிக்கு தகுதி பெற்றார். எனினும் சொந்த கோயிலை கவனிக்க வேண்டியிருந்ததால் அவர் ஆசிரிய பணிக்குச் செல்லவில்லை.

இல்லற வாழ்வு

சண்முகநாத சர்மா 1943ஆம் ஆண்டு துரைசாமி ஐயர், லலிதாம்பா தம்பதியினரின் மகள் சாந்தாதேவியை திருமணம் செய்தார். இத்தம்பதி உமாகாந்தன் சர்மா, ஸ்ரீதரன் சர்மா, சதானந்தன் சர்மா என மூன்று ஆண்குழந்தைகளை பெற்றெடுத்தனர்.

குரு சேவை

திருமணமானபின் சண்முகநாத சர்மாவுக்கு ஆசாரிய அபிஷேகம் செய்யப்பட்டது. அதிலிருந்து அவர் சண்முகநாத குருக்கள் என அழைக்கப்படலானார்.
ஆசாரிய அபிஷேகம் செய்யப்பட்டு குருக்களான உடனேயே அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. திருக்கோணமலை மாவட்டத்தில் உள்ள கந்தளாய் என்னும் ஊரில் குளக்கோட்டு மன்னனால் அமைக்கப் பெற்ற சிவாலயம் அந்நியர் ஆட்சிக் காலத்தில் சிதிலமடைந்திருந்தது. இந்த ஆலயம் புனரமைக்கப்பட்டு 1954 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை நடாத்திய சிவாச்சாரியார்களுள் சண்முகநாத குருக்களும் ஒருவராவார்.

முருகன் அருளால் பிறந்தவர் என்பதாலோ என்னவோ, சண்முகநாத குருக்களுக்கு முருகன் மேல் பக்தி அதிகம். அதனால் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு விசேட நாட்களில் சென்று பூசைகள் செய்யத் தொடங்கினார்.

தந்தை கந்ததாச ஐயர் 1954ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். எனவே வீரபத்திர சுவாமி ஆலய பொறுப்பை சண்முகநாத குருக்கள் ஏற்றுக் கொண்டார். அப்போது சண்முகநாத குருக்களின் மைத்துனர் சோ. இரத்தினசபாபதி ஐயர் கூட இருந்து உதவிகள் செய்தார். கோப்பாயில் மைத்துனர் உதவியாக இருந்ததால் சண்முகநாத குருக்கள் தொடர்ந்து நல்லூருக்கு போய் பணியாற்ற முடிந்தது.

தனது பாட்டியின் பூர்விகமான உடுவில் அம்மன் கோயிலில் திருவிழா நடைபெறும்போது அங்கு சென்று கொடியேற்றி உற்சவம் செய்வார்.

கோப்பாயைத் தமது பிறப்பிடமாகக் கொண்ட கந்தையா வைத்தியநாதன் திருக்கேதீஸ்வரம் கோவில் புனருத்தாபன சபையின் தலைவராக இருந்தார். சண்முகநாத குருக்கள் அவரை அணுகி வீரபத்திர சுவாமி ஆலயத்தை புனருத்தாபனம் செய்ய உதவுமாறு கேட்டார். அவரும் சம்மதித்து வேண்டிய நிதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார். இவ்வாறு சண்முகநாத குருக்கள் முயற்சியால் வீரபத்திர சுவாமி ஆலயம் புனருத்தாபனம் செய்யப்பட்டு 1956 ஆம் ஆண்டு தை மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கிராமத்திலுள்ள சிறுவர், சிறுமியர் திருமுறைப் பயிற்சி செய்ய வசதியாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோவிலில் பஜனை நடைபெற ஏற்பாடு செய்தார். பஜனை முடிவில் ஒவ்வொரு சிறுவனும், சிறுமியும் ஒரு தேவார திருமுறைப் பாடல் பாடவேண்டும். பிள்ளைகளை ஊக்குவிக்க பஜனை முடிவில் எல்லோருக்கும் சுண்டல் பிரசாதம் வழங்கும் முறைமையை அறிமுகம் செய்தார்.

வீரபத்திர சுவாமி ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற சண்முகநாத குருக்கள் அரும்பாடு பட்டார். நல்லூருக்குப் போய் வந்ததால் பல ஊர்களிலுள்ள பெரியார்களின் அறிமுகம் அவருக்குக் கிடைத்தது. பல ஊர்களைச்சேர்ந்த ஆசிரிய பெருமக்களை அழைத்துவந்து பிரசங்கம், கதா காலட்சேபம் என்பவற்றை நடத்துவார்.

வீரபத்திர சுவாமி ஆலயத்தில் திருமுருக கிருபானந்தவாரியாரின் கதாப்பிரசங்கம் நடைபெற ஏற்பாடு செய்தது சண்முகநாத குருக்களின் ஒரு குறிப்பிடத் தக்க பணியாகும். 1950களில் திருமுருக கிருபானந்தவாரியார் அவ்வப்போது யாழ்ப்பாணம் வந்து கதாப்பிரசங்கம் செய்வது வழக்கம். அவரது பிரசங்கத்தைக் கேட்க ஆயிரக்கணக்கில் மக்கள் வருவார்கள். பெரிய மைதானம் போன்ற விசாலமான பரப்பளவைக் கொண்ட கோயில்களிலேயே அவரின் நிகழ்ச்சியை நடாத்த முடியும். வீரபத்திர சுவாமி ஆலயம் சிறியது. வீதிகளும் விசாலமானவை அல்ல. தொண்டர்களை கூட்டி ஆலோசனை செய்தார். வீரபத்திர சுவாமி ஆலயத்தின் முன்னால் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு அன்பளிப்பாக விடப்பட்ட ஒரு காணியும் அதன் நடுவில் ஒரு வைரவ கோயிலும் இருந்தன. நடராஜர் என்ற சைவக்குரு இதனை பராமரித்து வந்தார். அந்தக் காணி முட்கம்பி வேலி போடப்பட்டு பாதுகாக்கப் பட்டிருந்தது. நடராஜர் பெருமனதுடன். அந்த முட்கம்பி வேலியை அகற்றி விசாலமான இடம் கிடைக்க வகை செய்தார். "சம்பந்தாண்டான் வாதமும் கம்பத்திளையனார் காட்சியும்" என்ற தலைப்பில் 1958ஆம் ஆண்டு ஐப்பசி மாதத்தில் ஒருநாள் வாரியார் சுவாமிகளின் கதாப்பிரசங்கம் வீரபத்திர சுவாமி ஆலய முன்றலில் நடைபெற்றது.

வீரபத்திர சுவாமி ஆலயத்தில் நவக்கிரக சந்நிதி இருக்கவில்லை. அதற்கு இடமும் போதாமலிருந்தது. சண்முகநாத குருக்கள் நவக்கிரகங்களில் முக்கியமானவராக கருதப்படும் சனீச்வரனுக்கு ஒரு சந்நிதியை உருவாக்கி 1959இல் கும்பாபிஷேகம் செய்து வைத்தார்.

1960ஆம் ஆண்டளவில் கோப்பாய் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் பலகாலம் வெளியிடங்களில் அரச பணியாற்றி ஓய்வு பெற்றபின் கோப்பாய் தெற்கில் வந்து குடியேறினார். வீரபத்திர சுவாமி ஆலயத்தில் நடேசர் பிரதிட்டை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தார். சண்முகநாத குருக்களும் இரத்தினசபாபதி ஐயரும் இதற்கு சம்மதிக்கவில்லை. ஆகம விதிப்படி நடேசர் சந்நிதி ஏற்படுத்த கோயிலில் இடம் போதாது என அவருக்கு எடுத்துக் கூறினர். ஆனால் அவர் தனது பணபலம், செல்வாக்கு என்பவற்றைப் பயன்படுத்தி தான் நினைத்ததை சாதித்தார். இதனால் ஏற்பட்ட மனக்கசப்பால் சண்முகநாதக் குருக்கள் வீரபத்திர சுவாமி ஆலயத்தை இரத்தினசபாபதி ஐயரின் பொறுப்பில் விட்டு நிரந்தரமாக நல்லூர் கந்தசாமி கோயிலில் பணியாற்ற சென்றார்.

நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் பதினைந்து ஆண்டுகள் விசேட தினங்களில் வந்து பணியாற்றிய பின்னர் 1964 ஆம் ஆண்டு தொடக்கம் நிரந்தர சிவாச்சாரியராக நியமனம் பெற்றார்.

நல்லூர் முருகனுக்கு அவர் ஆற்றிய பணிகள் பலப்பல. அவற்றுள் ஆறுமுக சுவாமியின் புனருத்தாபன மகாகும்பாபிஷேகத்தை பிரதம சிவாச்சாரியராக இருந்து நடாத்தி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

ஆலய வருடாந்த மகோற்சவத்தின்போது வசந்த மண்டப பூசையை சிறப்பாக, அழகாக செய்வார். உற்சவங்களின்போது தெய்வத் திருவுருவங்களை அலங்காரம் செய்வார். சண்முகநாத குருக்கள் நன்றாக ஓவியம் வரைவார். யாரிடமும் கற்றுக்கொள்ளவில்லை, இயற்கையிலேயே ஓவியக்கலை அவருக்கு கைவரப்பெற்றது. வீரபத்திர சுவாமி ஆலய கும்பாபிஷேகத்தின்போது கோபுர வாயிலின் இருமருங்கிலும் துவார பாலகர்களை வரைந்து வைத்தமை ஒன்றே அவர் வெளியாருக்குத் தெரியத்தக்கதாக செய்து வைத்த ஓவியப் பணியாகும். வீட்டில் அவர் வரைந்து வைத்த தெய்வத் திருவுருவங்கள் ஏராளம். அவரது இந்தக் கலைத் திறமை நல்லூரில் திருவுருவங்களை அலங்கரிக்கும் பணியை சிறப்பாக செய்ய உதவியது. தெய்வத் திருவுருவங்களை அலங்கரிக்கும் தங்க நகைகளை கோயில் அறங்காவலர் சண்முகநாத குருக்களின் பொறுப்பிலேயே கொடுத்து வைப்பது வழக்கம்.

நவராத்திரி பூசைகளை நல்லூரில் பெரும்பாலும் சண்முகநாத குருக்களே பிரதம குருவாக இருந்து நடத்தி வைப்பார். விஜயதசமியன்று மகிஷாசுர சம்ஹாரத்தின் போது கன்னி வாழை வெட்டும் விழாவை சிறப்பாக செய்வார்.

கோப்பாயில் வீரபத்திர சுவாமி ஆலயத்துக்கு அண்மையில் ஒரு அம்மன் கோயில் இருக்கிறது. இதை பொதுவாக நாச்சிமார் கோயில் என்று ஊர்மக்கள் சொல்வார்கள். அக்காலத்தில் இக் கோயில் நவராத்திரிக்கு மட்டும் திறக்கப்பட்டு பூசைகள் நடைபெறும். இதனையும் சண்முகநாத குருக்களே செய்வார். வீரபத்திர சுவாமி ஆலயத்தை விட்டு நல்லூர் சென்ற பின்னரும் இந்தக் கோயிலுக்கு சண்முகநாத குருக்கள் வந்து பூசைகள் செய்வார். எவ்வளவு கால தாமதமானாலும் மக்கள் பொறுமையுடன் அவருக்காக காத்திருப்பார்கள். அந்த அளவு அன்பும் பற்றுதலும் கொண்டிருந்தார்கள் என்பதையே இது காட்டும். அவர்கள் நினைத்தால் வேறொரு குருக்களை ஏற்பாடு செய்திருக்க முடியும்.

நல்லூர் கந்தன் ஆலயத்தில் சிவாச்சாரியராக பணியாற்றியதுடன் கோயிலில் கந்தபுராணம் படித்தல், பயன் சொல்லுதல் ஆகிய பணிகளையும் செய்து வந்தார்.

1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த இடப்பெயர்வின்போது நல்லூர் கந்தசாமி கோவில் பூசைகளின்றி மூடப்பட்டது. சுமார் ஆறு மாதங்களின் பின்னர் மக்கள் நல்லூருக்குத் திரும்பியபோது, அறங்காவலர் இல்லாத நிலையில், பக்தர்கள் வந்து கேட்டதற்கிணங்க சண்முகநாத குருக்கள் பிராயச்சித்த அபிஷேகம் செய்து பூசைகளை நடாத்தினார்.

சங்கர நாராயணர் பிரதிட்டை


சநாதன தர்மத்தில் சைவம் வைஷ்ணவம் ஆகிய பிரிவுகள் இருக்கின்றன. சிவனை முன்நிறுத்திய சைவத்துக்கும் விஷ்ணுவை முன்நிறுத்திய வைணவத்துக்குமிடையேஒரு காலத்தில் பூசல்கள் ஏற்பட்டன. அரியும் அரனும் வேறல்ல ஒருவரே என்ற தத்துவத்தை விளக்க சங்கரநாராயணர் வழிபாடு வழிசெய்தது. யாழ்ப்பாணத்தில் சங்கரநாராயணருக்கு ஒரு கோயில் எழுப்ப சண்முகநாத குருக்கள் முயற்சி செய்தார். 1992 ஆம் ஆண்டளவில் அரும்பாடு பட்டு அன்புள்ளங் கொண்ட பக்தர்களின் உதவியுடன் சங்கரநாராயணர் விக்கிரகத்தை வார்ப்பித்து எடுத்துவிட்டார். ஆனால் தனியாக கோயில் எழுப்ப முடியவில்லை. நாட்டு நிலை குழப்பம் மிகுந்ததாக இருந்தது. எனவே இருக்கின்ற கோயில்களில் ஒன்றிலேயே விக்கிரகத்தை பிரதிட்டை செய்ய தீர்மானித்தார்.

யாழ்ப்பாணம் அத்தியடி பிள்ளையார் கோயில் பிரசித்தமானது. சண்முகநாத சர்மாவின் மாமனார் துரைசாமி ஐயரின் தந்தையார் முன்னொரு காலத்தில் இக்கோயிலில் குருக்களாக இருந்திருக்கிறார். கோயில் அறங்காவலரும் சங்கரநாராயணரை பிரதிட்டை செய்வதில் மகிழ்ச்சி அடைந்தார். ஆகவே அத்தியடி பிள்ளையார் ஆலயத்தில் மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் பிரதம குரு மகாராஜஸ்ரீ சண்முகநாத குருக்கள் முன்னிலையில் சங்கரநாராயணர் விக்கிரகம் பிரதிட்டை செய்யப்பட்டது. எதிர்பாராத விதமாக சங்கரநாராயணர் பிரதிட்டை செய்யப்பட்ட நாள் மாமனார் துரைசாமி ஐயரின் பிறந்த நாளாகவும் அமைந்துவிட்டது.

நிறை வாழ்வு

ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் நல்லூரானின் பணியில் ஈடுபட்டிருந்த சண்முகநாத குருக்கள், தனது எழுபத்தேழாவது வயதில், 2002 ஆம் ஆண்டு, தமக்கு உற்ற துணையாக விளங்கிய தர்ம பத்தினியை இழந்த பின்னர், நிரந்தர பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

அதன்பின் சிலகாலம் மட்டக்களப்பு சென்று மூத்த மகனுடனும் இன்னும் சில காலம் இளைய மகனுடன் அக்கரைப்பற்றுவிலும் வாழ்ந்து வந்தார்.

தமது இறுதிக்காலம் நல்லூரானின் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என்று மீண்டும் யாழ் வந்து திருநெல்வேலியில் தமது வீட்டில் வாழ்ந்தார்.

பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் எல்லோரும் நல்ல வாழ்வு பெற்றுள்ளதைக் காணும் பாக்கியம் பெற்ற சண்முகநாத குருக்களின் வாழ்வு நிறை வாழ்வாக அமையப்பெற்று 2005 ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் நாள் திங்கட்கிழமை (பார்த்திப ஆண்டு வைகாசி மாதம் 17ந் திகதி கிருஷ்ண பட்ச அட்டமி திதி சதய நட்சத்திரம்) இக வாழ்வை நீத்து முருகன் திருவடி நீழலை அடைந்தார்.

ஓம் ஸாந்தி ஸாந்தி!! ஸாந்தி!!!

இணைப்புகள்

இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ்த் துறை தலைவர் பேராசிரியர் எஸ். சிவலிங்கராசா அவர்கள் எழுதிய நினைவுக் குறிப்பு

வடக்கு கிழக்கு வலய உதவிப் பதிவாளர் நாயகம் பிரம்மஸ்ரீ ந. சதாசிவ ஐயர் அளித்த சிறப்புரை

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய ஸ்வாமிகள் வழங்கிய அநுதாபச் செய்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக