வடக்கு கிழக்கு வலய உதவிப் பதிவாளர் நாயகம் பிரம்மஸ்ரீ ந. சதாசிவ ஐயர் அளித்த சிறப்புரை

சுடராகி ஒளிர்ந்தோன்



கோப்பாய் பிரதேசம் பல பெரியோர்களை தந்த புண்ணிய பூமியாகும். சண்முகநாத குருக்களை தந்ததால் அதன் பெயர் மேலும் ஒரு படி உயர்ந்தது. 1984-ல் திருநெல்வேலியில் ஐயாவின் புதல்வர்களின் வீட்டிற்கு அருகில் குடியேறிய நாள் முதல், நல்லூரானை இடையறாது தரிசிக்கத் தொடங்கிய நாள் முதல் ஐயா அவர்களையும் அவர் புதல்வர்களையும் அறியும் பாக்கியம் பெற்றேன்.

குருக்கள் என்னும் சொல்லிற்குரிய தோற்றத்தையும் அணிகலன்களையும் கொண்டவர் அவர். நல்லூர் முருகனாகவே காட்சி கொடுப்பார். ஆறுமுக சுவாமிக்கு அர்ச்சனை செய்வார். ஆலயத்துள் பொறுப்பாக எஜமானருடன் கூட விசுவாசமாக சாவிக் கொத்தை இடுப்பில் செருகியபடி செயற்படுவார். நவராத்திரி காலங்களில் காப்புக்கட்டி வாழை வெட்டுவார். வயதான காலத்தில் கூட "இவர் எப்படி வெட்டப்போகிறார்?" என்று நாம் நினைத்தபோதும் சிறப்பாக அவர் வாழை வெட்டிய காட்சி இன்னும் என் கண்முன்னே நிற்கிறது.

அவர் கந்தபுராணத்துக்கு பயன் சொல்லும்போது எல்லோர் மனமும் அதில் ஒரு தரம் கைகூப்பி இருக்கச் சொல்லும்.

முருகனுடனேயே ஒன்றி, முருகனையே பூசித்து, நல்லூர் முருகனுக்கே பணியாற்றிய அவர் தன்னுடைய கடமைகளையும் மறக்கவில்லை. முத்துப் போல மூன்று பிள்ளைகளை ஈன்று, முறைப்படி வளர்த்து, கற்பித்து, நற்றொழில் பெற வழிவகுத்தார். மூவரும் ஒருவராக தந்தையை இறுதிவரை பார்த்ததையும் நான் இதில் குறிப்பிட்டே ஆகவேண்டும். வடக்கிருத்தல் எனும் வழமைக்கேற்ப தன் கடமை யாவற்றையும் முடித்தபின் தானுன்டு, தன்பாடுண்டு என பிள்ளைகளுடன் அமைதியாக இருந்து அமைதியாகவே இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அமைதியாக வாழ்ந்து கடமைகளை எப்படிச் செய்யலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு. அவர் வழி பின்பற்றி வாழும் அவர் மைந்தர்களும் இதற்கேற்ற எடுத்துக்காட்டு. இப்படி மனிதர் யாவரும் வாழ்ந்தால் உலகத்திலே எத்தனை இன்பமான ஒரு மனித இனம் உருவாகும் என சிந்திப்போமாக.

இவ்வாறே எல்லோரும் வாழ நல்லூர் கந்தன் காலடியில் சாந்திபெறும் அன்னாரின் ஆத்மா ஆசி அருள வேண்டும் என வேண்டுவோமாக.

நல்லூரான் வீதி நடந்தால் பிணி தீரும்.

Sri N. Sathasiva Iyer
Asst. Registrar General
North East Zone
Jaffna
Sri Lanka
26-05-2006


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக