பேராசிரியர் எஸ். சிவலிங்கராசா அவர்கள் எழுதிய நினைவுக் குறிப்பு


இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ்த் துறை தலைவர் பேராசிரியர் எஸ். சிவலிங்கராசா அவர்கள் எழுதிய

நினைவுக் குறிப்பு


ஈழத்துக் கல்விப் பாரம்பரியத்திலும் பண்பாட்டுப் பேணுகையிலும் பிராமண சமூகத்தினரின் பங்களிப்பு மகத்தானது. ஆரியச் சக்கரவர்த்திகள் என அழைக்கப்பட்ட யாழ்ப்பாண மன்னர்களும் பிராமண வமிசத்தைச் சேர்ந்தவர்கள் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஈழநாட்டிற்கு மேலைப் புலத்தவர்கள் வருவதற்கு முன்னர் கல்வி, புலமை, அரசியலாதிக்கம் முதலானவற்றிலே பிராமண சமூகத்தினரே சிறப்புற்று விளங்கினர் என்பதற்குச் சான்றுகள் உள.

பிராமண சமூகத்தினர் தமிழ், வடமொழி இலக்கிய இலக்கணங்களில் மாத்திரமன்றி வேதாகமங்களிலும் சைவ சித்தாந்தத்திலும் வைத்திய சோதிடக் கலைகளிலும் ஆழமான புலமையுடையவர்களாக விளங்கினர். சரசோதிமாலை எனும் சோதிட நூலை இயற்றிய நான்காம் பராக்கிரமபாகுவின் அவைக்களப் புலவர் போசராச பண்டிதர் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரே என்பதும் குறிப்பிடத்தக்கது. ஈழத்துப் புலமைப் பாரம்பரியத்திலே நிலைத்து நிற்கும் ஆக்கங்களைத் தந்த வட்டுக்கோட்டை கணபதி ஐயர், கொச்சிக் கணேசையர், சுன்னாகம் வரத பண்டிதர், தும்பளை முத்துக்குமாரசாமிக் குருக்கள், தும்பளை சுப்பிரமணிய சாஸ்திரிகள், வித்துவ சிரோமணி கணேசையர் உள்ளிட்ட பல பேரறிஞர்கள் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களே என்பதும் ஈண்டு மனங்கொள்ளத்தக்கது. ஈழத்துத் தமிழ், வடமொழிக் கல்வி வளர்ச்சிக்கு அந்தணர்கள் ஆற்றிய பணி தனியே ஆராயப்படவேண்டிய விடயப்பரப்பை உள்ளடக்கியதாகும்.

மேலைப் புலத்தவரின் வருகையும், அவ் வருகையோடு ஓட்டி நிகழ்ந்த கிறீஸ்தவப் பரம்பலும், கிறீஸ்தவச் சூழல் தந்த ஆங்கிலக் கல்வியும் பிராமணச் சமூகத்தினரின் வாழ்வியல் வழிமுறைகளுக்குத் தடைக்கற்களாகவே அமைந்தன. ஆசார சீலர்களாகவும் செந்தண்மை பூண்டு ஒழுகும் பண்பினைக் கடைப்பிடிப்பவர்களாகவும், சமய அனுட்டானங்களைப் பேணுபவர்களாகவும் பிராமண சமூகத்தினர் விளங்கியமையால் மேலைப்புலத்தவரின் கல்வி, சமய, பண்பாட்டு ஓட்டத்துடன் ஒத்து ஓடமுடியாத சமூகச் சூழ்நிலையிலே தமது பணிகளை மேற்கொண்டனர். மேலைப்புல அலைக்கு எதிராக நீச்சலடிக்கும் பணியைப் பிராமணர்களே செய்து வந்தனர். இச் சமூகத்தினருக்கு இருந்த இந்திய உறவும் தொடர்பும் பண்பாட்டுப் பேணுகைக்கு பக்கபலமாக இருந்தன எனலாம்.

யாழ்ப்பாண அரசின் இராசதானியாக நல்லூர் விளங்கிய காலத்திலேயே கோப்பாய் அதன் பிரதான ஆட்சி மையப் பகுதியாக இருந்தது. சைவமும் தமிழும் வளர்ந்த இக்கிராமத்திலே பல அறிஞர்களும் வித்துவான்களும் தோன்றியுள்ளனர். சைவமும் தமிழும் செழித்து வளர்ந்த கோப்பாய் கிராமத்திலே தான் பிரம்மஸ்ரீ சண்முகநாதக் குருக்கள் பிறந்து வளர்ந்தார்கள்.

தமிழையும் வடமொழியையும் குருகுலக் கல்வி மரபிலே பெற்ற சண்முகநாத குருக்களுக்கு ஆசார அனுட்டானங்கள் குடும்பச் சொத்தாகவே இருந்தன. அரச உத்தியோகம் பெறும் கல்வித் தகைமையைப் பெற்றிருந்தபோதிலும் கோயிற் கடமைகளே மேலானவை என்ற கருத்து நிலை வேரூன்றியிருந்தமையால் கோப்பாய் வீரபத்திர சுவாமியின் பணியே தம் தலையாய பணியென ஏற்றுக்கொண்டார்.

ஈழத்துச் சைவாலயங்களிலே நல்லூர்க் கந்தசுவாமி கோயிலுக்குப் பலவகையான தனித்துவமும் முக்கியத்துவமும் உண்டு. ஈழத்திற்கு, சிறப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு முன்மாதிரியாகத் திகழும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலே ஐம்பது ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றிய பெருமை இவர் ஒருவரையே சாரும் என எண்ணுகின்றேன்.

நல்லூரிலே, ஆறுமுகசுவாமி சந்நிதானத்திலே சண்முகநாதக் குருக்களைக் கண்டவர்கள் அவரது பக்தி பூர்வமான அபிஷேக ஆராதனைகளை இலகுவில் மறக்க மாட்டார்கள். தெய்வத்துடன் பேசுவது போல அவர் செய்யும் பூசைகள், தீபாராதனையின் அமைதி தவழும் அழகு என்றும் எம் நெஞ்சை விட்டு நீங்காதவை.

நல்லூர் வழிபாட்டிற்கு வந்த பல இலட்சம் அடியார்களின் நெஞ்சிலே முருகனோடு சண்முகநாதக் குருக்களின் முகமும் நினைவிலே நிற்கும்.

பிரம்மஸ்ரீ சண்முகநாத குருக்கள் சிவபதமடைந்து ஆண்டு ஒன்று ஓடினாலும் அவரது தெய்வீகப் பணியும் பக்தி ஈடுபாடும் அடியார்கள் மனத்திலே என்றும் நினைவிலே நிற்கும். அவரது ஆன்மா பேரானந்தப் பெருவாழ்விலே நின்று நிலைக்கும்.

பின்குறிப்பு: ஈழத்துப் பிராமணச் சமூகத்தினரின் வாழ்வியல் சமய கரண அனுட்டானங்களோடு மாத்திரம் கணிக்கப்படாது கல்வி, புலமை, சமூக உறவு முதலான பலவகைகளிலும் ஆய்வு செய்யப்படவேண்டும் என்று அவாவுறுகிறோம்.

பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா
தலைவர்
தமிழ்த்துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
இலங்கை.
25-05-2006

5 கருத்துகள்:

 1. சங்க காலத்தில் பிராமணர் என்ற சொல் ஏன்?. சங்க காலத்தில் அந்தனர்களும் பார்ப்பணர்களும் சமஸ்கிருதம் பேசியதாகவோ, சமஸ்கிருத மந்திரம் சொன்னதாகவோ சான்றுகள் இல்லையே ஏன்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இக்கட்டுரையில் சங்ககாலம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. தயவு செய்து கட்டுரையுடன் தொடர்பில்லாத விடயங்களைப் பற்றிக் கருத்திட வேண்டாம்.

   நீக்கு
 2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 3. கணபதி ஐயர், கொச்சிக் கணேசையர், சுன்னாகம் வரத பண்டிதர், தும்பளை முத்துக்குமாரசாமிக் குருக்கள், தும்பளை சுப்பிரமணிய சாஸ்திரிகள் ஆகியோரை எதனால் பேரறிஞர்கள் என்கிறீர்கள்?

  பதிலளிநீக்கு
 4. அவர்கள் பெயரை இன்றைக்கும் சொல்லக்கூடியதாக இருப்பது எதனால்?

  பதிலளிநீக்கு